மிக்ஜாம் புயல் காரணமாக நள்ளிரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து பல பகுதிகள் வெள்ளக் காடாக மாறியுள்ளனர். இதுவரை வரலாறு காணாத அளவுக்கு 34 செமீ மழை பெய்துள்ள நிலையில் இன்று மாலை வரை மழை பெய்யும் என்பதால் இன்னும் வெள்ளம் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அந்த பகுதி முழுவதும் வெள்ள வழிந்தோடுவதால் பொதுமக்கள் பலர் தங்கள் கார் உள்ளிட்ட வாகனங்களை பாதுகாப்பதற்காக வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். நூற்றுக் கணக்கான வாகனங்கள் மேம்பாலத்தில் வரிசைகட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கரணை உள்ளிட்ட சில பகுதிகளில் அதிக வெள்ளம் காரணமாக கார்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.