தருமபுரி மாவட்டம் அருகே உள்ள பிலிகுண்டுலு நீர்தேக்க பகுதி அருகே உள்ள முசல்மவுடு பகுதியை சேர்ந்தவர் காட்ராஜ். காவிரி ஆற்றில் மீன்பிடித்து வந்த மீனவரான இவர் கடந்த சில நாட்கள் முன்பு மீன்பிடிக்க சென்றார். ஆனால் சடலமாக கரை ஒதுங்கினார். அவரது வயிறு கிழிந்து குடல் சரிந்து இறந்து கிடந்தார். ஆற்றில் உள்ள முதலைதான் காட்ராஜை கொன்று விட்டதாக முதலையை பிடிக்க மக்கள் வனத்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் ஓகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை காவிரி ஆற்று பகுதியில் மக்கள் மீன் பிடிப்பது, குளிப்பது, விலங்குகளை குளிப்பாட்டுவது என காவிரி ஆற்றில் புழங்கி வருகின்றனர். இந்நிலையில் ஆற்றில் மக்கள் குளித்துக் கொண்டிருந்தபோது அருகே உள்ள பாறையில் 10 அடிக்கும் அதிகமான நீளமுள்ள முதலை ஒன்று அமர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மீனவரை கொடூரமாக தாக்கி கொன்ற முதலை அப்பகுதியில் சுற்றி வருவதாக புகார் அளித்துள்ள மக்கள் அதை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை அளித்துள்ளனர்.