அரசர்கள் தராத படிப்பை ஆங்கிலேயர்கள் தந்தனர்! – மீண்டும் சர்ச்சையில் பா.ரஞ்சித்

Webdunia
சனி, 24 ஆகஸ்ட் 2019 (18:38 IST)
தமிழக மன்னர்களை பற்றி பா.ரஞ்சித் பேசியது ஏற்கனவே சர்ச்சையை உண்டாக்கிய நிலையில் தற்போது ஒரு விழாவில் அவர் பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூரில் ஒரு விழாவில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் “ராஜராஜ சோழன் ஆட்சிக்காலம் தமிழகத்தின் இருண்ட காலம். அப்போதுதான் ஏழை மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன” என்று பேசினார். இது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை மதுரை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்றது. அப்போது பா.ரஞ்சித்திற்கு ஆதாரம் இல்லாமல் எதையும் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் நேற்று புதிய கல்வி கொள்கைக்கு எதிராக திருச்சியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பா. ரஞ்சித் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ”அரசர்களின் ஆட்சிக்காலத்தில் கோவில்களும், மடங்களும் பல இருந்திருக்கின்றன. அவற்றை இன்றும் நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் ஒரு பாடசாலை கூட இல்லையே ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பேசிய அவர் “மன்னர்கள் காலத்தில் யார் படிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தனர். கல்வி கொடுத்தால் கேள்வி கேட்பார்கள் என்பதால் கல்வி தராமல் சதி செய்தனர். வெள்ளையர்கள் ஆட்சி காலத்திலேயே அனைவருக்கும் கல்வி கிடைத்தது” என்று பேசியுள்ளார்.

இதனால் பா.ரஞ்சித் தொடர்ந்து அரசர்களின் வரலாறுகளை திரித்து பேசுவதாகவும், அவமானப்படுத்துவதாகவும் பலர் கொதிப்படைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்