சசி அணிக்கு சம்மட்டியடி கொடுத்த ஓபிஎஸ் தரப்பு வாதம் இது தான்!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2017 (13:16 IST)
அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் சசிகலா தர்ப்புக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் அதிரடியாக அதனை தற்காலிகமாக முடக்கியது.


 
 
சசிகலா தரப்புக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனதற்கு ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் வைத்த ஒரு வாதம் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இரட்டை இலை சின்னத்தின் உரிமை யாருக்கு என்ற விவாதம் தொடங்கியதும் ஓபிஎஸ் அணி சார்பில் முதலில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதங்களை முன்வைத்தார்.
 
அவர் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என பேசத்தொடங்கியதும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் இரட்டை இலை சின்னத்தை பற்றி மட்டும் வாதத்தை முன் வையுங்கள் என கண்டிப்புடன் கூறிவிட்டனர்.
 
இதன் பின்னர் வாதத்தை தொடர்ந்த வைத்தியநாதன், உச்சநீதிமன்றத்தால் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளி சசிகலா. தண்டனை பெற்ற குற்றவாளி தேர்தலில் போட்டியிட முடியாது. அவரது பெயர் வாக்காளர் பட்டியலிலும் இடம்பெறாது.
 
எனவே ஒரு தண்டனை பெற்ற குற்றவாளி ஒரு வேட்பாளரை பரிந்துரைப்பது, அந்த வேட்பாளருக்கு சின்னத்தை ஒதுக்கி, அதை தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பது என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானதாகும். இதனால் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டமே கேள்விக்குறியாகும் என்றார் அதிரடியாக.
 
ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதனின் இந்த வாதம் தான் சசிகலா அணிக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்படாததற்கு காரணம் என அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்