அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம்

வியாழன், 17 ஜூலை 2014 (19:38 IST)
12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் 500 இடங்களைப் பெறும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் அவர்கள் பட்டய / பட்டப் படிப்பு முடிக்கும் வரை வருடத்திற்கு ரூ.3000/- வீதம் தமிழக அரசு பரிசுத் தொகை வழங்குகிறது.
 
இது தொடர்பாகத் தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் அறிவிப்பு வருமாறு:
 
12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ / மாணவியர்களில் முதல் 500 இடங்களைப் பெறும் மாணவியர் மற்றும் முதல் 500 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு அவர்கள் பட்டய / பட்டப் படிப்பு முடிக்கும் வரை வருடத்திற்கு ரூ.3000/- வீதம் பரிசுத் தொகை வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டு. 2012-13ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
 
நடப்பாண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்த, அரசு முனைந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், மார்ச் 2014இல் நடைபெற்ற 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாகப் பயின்று தேர்வு எழுதிய பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ / மாணவியர்களில் 1173 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மற்றும் 1176 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவிகள் பயன் பெறலாம். 
 
இவர்கள் தங்களது மதிப்பெண் சான்று, சாதிச் சான்று மற்றும் தற்போது பயிலும் கல்லூரியிலிருந்து பெறப்பட்ட Bonafide சான்றுகளின் நகல்களுடன் அவர்கள் +2 பயின்ற மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 
 
இவ்வாறு தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்