இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை மே 16 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா, பீகார் ஆகிய 5 மாநில முதலமைச்சர்கள் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம் ஆகிய 6 மாநில அரசுகள் மத்திய அரசின் உத்தரவை பின்பற்ற இருப்பதாக தெரிவித்தது. மேலும், ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்வு கொடுக்கலாமா என்பது பற்றி மே 3 ஆம் தேதிக்கு பின் அறிவிக்கப்படும் என பிரதமர் மோடி ஆலோசனை கூட்டத்தில் கூறியதாக தகவல் தெரிவித்தன.
இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை. எனவே, ஊரடங்கு குறித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,
கொரோனா பரவாமல் இருக்க அறிவிக்கப்பட்ட இரண்டாவது ஊரடங்கு காலம், மே 3 ஆம் தேதியோடு முடிவடைகிற நிலையில், மேலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, நீக்கப்படுமா அல்லது படிப்படியாகத் தளர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் மக்கள் மனதில் நிலவுகிறது.
மக்களைப் பாதுகாப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுக்கின்ற எந்த முடிவாக இருந்தாலும் அதற்கு கட்டுப்பட்டு ஒத்துழைக்க வேண்டியது பொதுமக்களின் கடமையாகும். எனவே, ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்த்துவது குறித்து கடைசி நேரத்தில் அறிவித்து பதற்றத்தை அதிகரித்திடாமல், தக்க முடிவெடுத்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.