சசிகலா டிடிவியை இணைப்பது குறித்த கேள்விக்கே இடமில்லை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் மனுத்தாக்கல் செய்தனர். இதற்கான பணிகளை முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் மேற்கொண்டு வருகிறார். இந்தப் பதவிக்கு பன்னீர்செல்வமும் எடப்பாடியும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில் வேறு சில அதிமுக நிர்வாகிகள் மனுத்தாக்கல் செய்ய வந்தது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலுக்கு வேட்புமனு கேட்டு வந்த ஒருசில அதிமுக தொண்டர்கள் அடித்து விரட்டப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. வரும் டிசம்பர் 7 ஆம் தேதி அதிமுகவில் உள்கட்சித் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவங்கள், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் அதிமுகவில் இனி இரட்டைத் தலைமை தான். சசிகலா டிடிவியை இணைப்பது குறித்த கேள்விக்கே இடமில்லை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். அதிமுகவில் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.