சேலத்தில் பாதியாக குறைக்கப்பட்டுள்ள ஷேர் ஆட்டோக்களின் கட்டணம்

செவ்வாய், 23 ஜனவரி 2018 (09:12 IST)
தமிழக அரசு பேருந்து கட்டணத்தை திடீரென உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. இதனால், சென்னை போன்ற பெரிய நகரங்கள் மட்டுமின்றி, சிறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் பேருந்துகளை பயன்படுத்தும் சாதாரண பொதுமக்கள், இதற்கு முன் செலுத்தியதை விட இரண்டு மடங்கு தொகை கொடுக்க வேண்டியுள்ளது. 
சரியான முன்னறிவிப்பின்றி இப்படி அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தவறு எனவும், இதனால், தாங்கள் மிகுந்து சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என பொதுமக்களும், மாணவர்களும் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பஸ் கட்டண உயர்வை பயன்படுத்தி சென்னையில் ஷேர் ஆட்டோக்களும் தங்களின் கட்டணத்தை உயர்த்தி அடாவடி செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் சேலத்தில் அதிருப்தியில் உள்ள பயணியரை, தங்கள் பக்கம் ஈர்க்கும் வகையில்  ஷேர் ஆட்டோக்களின் கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் ஷேர் ஆட்டோக்களில் பேருந்து கட்டணம் உயர்வதற்கு முன்பு குறைந்த பட்ச கட்டணம் 8 முதல் 10 ரூபாயாக இருந்தது. தற்பொழுது சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஐந்து ரோடு, அஸ்தம்பட்டிக்கு இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களின் கட்டணத்தை உரிமையாளர்கள் குறைப்பு செய்துள்ளனர்.
 
இதுகுறித்து பேசிய ஷேர் ஆட்டோ டிரைவர் ஒருவர், பேருந்து கட்டண உயர்வால் அதிருப்தியில் இருக்கும், பயணியரை எங்கள் பக்கம் இழுப்பதற்காக, கட்டண குறைப்பு செய்துள்ளோம். டவுன் பஸ்சில் குறைந்த பட்ச கட்டணம் 8 ரூபாயாக உள்ளதாலும் எங்களின் ஆட்டோக்கள் 5 ரூபாயில் இயக்கப்படுவதாலும் பயணியர் மத்தியில் ஷேர் ஆட்டோக்களின் மீது மவுசு அதிகரித்துள்ளது என்று கூறினார். சேலத்தில் மக்கள் பலர் ஆட்டோக்களில் கட்டணம் குறைவு என்பதால், பேருந்தை தவிர்த்து ஆட்டோக்களில் பயணம் செய்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்