குஜராத் குல்பர்க் கலவர வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை
வெள்ளி, 17 ஜூன் 2016 (13:21 IST)
குஜராத் குல்பர்க் கலவர வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனையும், 12 பேருக்கு தலா 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ஒருவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
குஜராத்தில் கடந்த 2002 ம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது ஆமதாபாத் அருகே உள்ள குல்பர்க் வீட்டுவசதி சொசைட்டியில் வசித்து வந்தவர்கள் மீது ஒரு கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. மேலும், அந்த கட்டிடத்துக்கும் தீ வைத்தது.
இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி உள்பட 69 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 66 பேரை போலீசார் கைது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு ஆகமாபாத்தில் உள்ள சிறப்பு செசன்சு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கு முடிவில், விஷ்வ இந்து பரிஷத் தலைவர் அதுல் வைத்யா உள்பட 24 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டது. ஆனால், பாஜக கவுன்சிலர் பிபின் படேல் உள்ளிட்ட 36 பேரை விடுதலை செய்யப்பட்டனர். விசாரணை காலத்தில் 6 பேர் மரணம் அடைந்தனர்.
இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 24 பேருக்கு தண்டனை குறித்த விவரம் 17 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்தது.
அதன்படி, 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் 12 பேருக்கு தலா 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ஒருவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கி நீதிபதி பி.பி.தேசாய்உத்தரவிட்டார்.