அது, வாய் தவறி வந்து விழுந்த வார்த்தைகள்: தமிழருவி மணியன்

புதன், 19 ஆகஸ்ட் 2015 (22:17 IST)
அது, வாய் தவறி வந்து விழுந்த வார்த்தைகள் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வருத்தம் தெரிவித்தால், அது அவருடைய தலைமைப் பண்புக்கு பெருமையைத்தான் சேர்க்கும் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீழ்ந்து கிடக்கும் காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கில் வேகமாகச் செயற்படுவதும், ஆட்சி பீடத்தில் உள்ளவர்களின் ஊழல் நடவடிக்கைகளை மக்கள் மன்றத்தில் ஆதாரங்களுடன் வெளிப்படுத்த முயற்சி செய்வதும், ராகுல் காந்தியை வரவழைத்துத் திருச்சியில் மாபெரும் மக்கள் கூட்டத்தைத் திரட்டிக் காட்டியதும், கூட்டணி ஆட்சி குறித்து வெளிப்படையாகப் பேசி வருவதும் அவரது தலைமைக்கு மதிப்புகளைத் தேடித்தந்தன என்றே சொல்ல வேண்டும்.
 
ஆனால், அவரிடம் உள்ள மிகப்பெரிய குறை அவரது வாயடக்கமின்மைதான். திருவாளர் அண்ணாதுரை பொய் பேசினார் என்று நான் சொல்ல மாட்டேன். அவர் உண்மைக்குப் புறம்பாகப் பேசி வருகிறார் என்று மேடை நாகரிகத்திற்கு மெருகேற்றிய சொல்லின் செல்வர் சம்பத்தின் நளினமான வார்த்தைப் பிரயோகங்களை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் இல்லை.
 
எண்ணம் என்பது ஏப்பம் இல்லை. அதை நினைத்தபடி வெளிப்படுத்துவதற்கு என்ற அண்ணாவின் அழகான விளக்கத்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இனியாவது நெஞ்சில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
 
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை அதிமுகவினர் தாக்க முற்பட்டதும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இல்லத்தை முற்றுகையிட முயன்றதும், அவரது உருவ பொம்மைகளை எரித்துத் தரக்குறைவான நடவடிக்கைகளில் ஈடுபட்டதும் நியாயமான செயல் அல்ல.
 
அன்று, சென்னை, உயர் நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக அதிமுக மகளிர் அணியினர் நடத்திய செயல் அனைவருக்கும் தெரியும். இன்று, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிரான நடவடிக்கைகளும் ஜனநாயக மரபுகளுக்கு உட்பட்டதாக இல்லை. அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது என்ற ஆணவம் எந்த நிலையிலும் தலைக்கேற ஆளும் கட்சியினர் இடம் அளிக்ககூடாது.
 
அது, வாய் தவறி வந்து விழுந்த வார்த்தைகள் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வருத்தம் தெரிவித்தால் அது அவருடைய தலைமைப் பண்புக்கு பெருமையைத்தான் சேர்க்கும்.
 
ஊடகங்கள் மீதும், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மீதும் அடிக்கடி அவதூறு வழக்குகளைப் போடுவதைத் தவிர்த்தால், முதலமைச்சர் ஜெயலிலதாவிற்கு ஜனநாயகத்தின் நடைமுறைகளைப் பராமரிப்பவர் என்ற நற்பெயர் கிடைக்கும். நாகரிக அரசியலை நடைமுறைப்படுத்த இரு கைகளும் இணைந்து ஓசை எழுப்புவது மிகவும் நல்லது என தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்