எடப்பாடி அரசுக்கு எதிராக களம் இறங்கியுள்ள தினகரனின் உருவ பொம்மையை எரித்தும், அவரின் புகைப்படங்களின் மீது செருப்பால் அடித்தும் கரூர் மாவட்ட அ.தி.மு.கவினர், அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமையிலும், நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன் முன்னிலையிலும் போராட்டம் நடத்தினர்.
கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் பதவியிலிருந்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் தொகுதியின் எம்.எல்.ஏ வுமான எம்.ஆர்.விஜயபாஸ்கரை நீக்கியதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் நேற்று அறிவித்தார்.
அதையடுத்து, தமிழ்நாட்டில் ஆங்காங்கே டி.டி.வி தினகரனின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்ட அ.தி.மு.க அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமையில், கரூர் பேருந்து நிலையம் அருகே டி.டி.வி தினகரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக கூறியும், முன்னாள் மறைந்த முதல்வர் இரும்பு பெண்மணி ஜெ.ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்யும் விதத்தில் மன்னார்குடி மாபியா கால் பதித்து வருவதாகவும், கூறி டி.டி.வி தினகரனின் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும், அவரது உருவ பொம்மையை எரித்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், கரூர் மாவட்ட அ.தி.மு.க வின் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு, தங்களது எதிர்ப்பை காட்டினர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.