நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் இப்போதே தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை பாஜக – அதிமுக கூட்டணி பிரிந்து விட்ட நிலையில் அதிமுகவுடன் எஸ்டிபிஐ, புரட்சி பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை கூட்டணியில் உள்ளன. பாஜகவுடன் தமிழ்மாநில காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
இதனால் தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என மும்முனை போட்டி நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து இன்று அதிமுக சிறப்பு குழு ஆலோசனை மேற்கொள்கிறது. இதில் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு சீட்டு வழங்கப்படலாம் என்றும், மற்ற கட்சிகளுக்கு சீட்டு கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. அதிமுகவின் முடிவை பொறுத்து பிற கட்சிகளின் கூட்டணி ஆதரவில் மாற்றங்கள் இருக்கலாம் என்பதால் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.