தினகரன் முதலமைச்சராக வேண்டும்: ஓபிஎஸ் போல் எடப்பாடியை காலி செய்ய ஆட்டம் ஆரம்பம்!

வியாழன், 8 ஜூன் 2017 (15:38 IST)
ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. ஓபிஎஸ் முதலமைச்சரானார். ஆனால் அவர் முதலமைச்சராக இருக்கும் போதே அவரது கட்சியினர் சசிகலா முதலமைச்சராக வர வேண்டும் என கூறி ஓ.பன்னீர்செல்வத்தை காலி செய்தனர்.


 
 
இதே உத்தியை தான் தற்போது எடப்பாடி பழனிச்சாமியை காலி செய்துவிட்டு தினகரனை முதல்வராக்க பயன்படுத்துகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்கும் போதே அதிமுகவின் நாஞ்சில் சம்பத், தினகரன் முதலமைச்சராக வேண்டும் என மக்கள் விரும்புவதாக கூறியுள்ளார்.
 
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத், அதிமுகவின் போதுச்செயலாளர் தினகரன் தான் என மக்கள் எண்ணுகின்றனர். தினகரன் தலைமை தாங்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர்கள், கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் அவரை சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.
 
தினகரனுக்கு மட்டுமே கட்சியை நிர்வகிக்கும் ஆளுமையும், திறமையும் உள்ளது. எடப்பாடியை முதலமைச்சராக நியமித்தவர் சசிகலா தான். எனவே, சசிகலாவுக்கும், தினகரனுக்கும் மாறாக எடப்பாடி நடந்து கொள்ள மாட்டார் என நான் நம்புகிறேன். என்றார் மேலும் தினகரன் முதலமைச்சராக வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்