புதிய கட்சி தொடங்க உள்ள தினகரன்: பரபரப்பை கிளப்பும் அதிமுக எம்எல்ஏ!

செவ்வாய், 3 அக்டோபர் 2017 (10:30 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக சரிவை சந்தித்து வருகிறது. கட்சிக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகளை நீக்கி வரும் தினகரன் புதிய கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாக அதிமுக எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.


 
 
அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் எடுத்த சசிகலா சிறைக்கு செல்லும் முன்னர் தனது அக்காள் மகன் தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்துவிட்டு சென்றார். இதனையடுத்து கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார் தினகரன்.
 
ஆனால் எதிர்பாராதவிதமாக தினகரன் தனித்து விடப்பட்டு அனைத்து மற்ற அனைவராலும் அவர் கட்சியிலிருந்து நீக்கி வைக்கப்பட்டார். இதனால் தனக்கு எதிராக செயல்படும் நிர்வாகிகளை பதவியில் இருந்து நீக்கி அடுத்தடுத்து அறிவுப்புகளை வெளியிட்டு வந்தார் தினகரன்.


 
 
இந்நிலையில் தொடர்ந்து அதிரடியாக பேசிவரும் அதிமுகவின் குன்னம் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகள் யாரும் தினகரனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அவர்களை தினகரன் பதவியிலிருந்து நீக்கியதன் மூலம் தெரியவருகிறது. எனவே, அவர் தனிக்கட்சி தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளைத் தொடங்கிவிட்டார் என்றே நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார்.
 
இதே ஆர்.டி.ராமச்சந்திரன் தான், ஆட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலைச் சந்திக்கலாம் என்றும் ஜெயலலிதாவை மருத்துவமனையில் சசிகலா எடுத்ததாகக் கூறப்படும் வீடியோவில் உள்நோக்கம் உள்ளது எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்