மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சென்னை ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருந்த நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது என்றும், அதனால் தமிழகத்திற்கு கல்விக்கான நிதி வழங்க முடியாது என்றும் கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக முதல்வர் உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். தமிழக மக்கள் அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், நாளை சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அவரது வருகை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்குக் கல்விக்கான நிதி வழங்க மறுத்த தர்மேந்திர பிரதான், சென்னைக்கு வந்தால் அவருக்கு கடும் எதிர்ப்பு ஏற்படும் என்பதால் தான் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.