தமிழகத்தில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கினால் செயல்படாமல் இருந்த மதுக்கடைகள் நாளை முதல் இயங்க உள்ளன. சென்னை மற்றும் சில பகுதிகளை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை நீடிக்க போலீஸார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அதன்படி ஒரு டாஸ்மாக் கடைக்கு, 2 காவலர்கள், 2 ஊர்க்காவல் படையினர் மற்றும் ஒரு தன்னார்வலரும் காவல் பணிகளில் ஈடுபடுவர். கூட்டம் அதிகமுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு காவல் ஆணையர் தலைமையின் கீழான குழு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் புதிய உத்தரவினை வெளியிட்டுள்ளார். அதன்படி கடலூர் டாஸ்மாக் கடைகளில் ஒருவருக்கு ஒரு மது பாட்டில் மட்டுமே வழங்கப்படும். மேலும் கடைகளில் வாங்கும் மதுவை யாரும் பொது இடங்களில் வைத்து அருந்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.