கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் உருகுலைந்து போயுள்ளனர். கஜா புயலால் நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்து போயுள்ளன. பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பனை, வாழை, தென்னை மரங்கள் வேரோடு சாய்துள்ளன.
பேயாட்டம் ஆடிய கஜாவால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். குடிக்க தண்ணீரின்றி, உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி தவித்து வருகின்றனர்.
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட நாகை , தஞ்சை ,திருவாரூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் பார்வையிட்ட பின்னர் நிவாரண உதவிகளையும் மக்களுக்கு வழங்கவுள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் புதுக்கோட்டை, தஞ்சைக்கு சென்ற முதலமைச்சர் நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் பாதியிலேயே திருச்சி திரும்பிவிட்டனர். பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் ஹெலிகாப்டரை இயக்க முடியாது என்பதால் அவரின் பயணம் ரத்து செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.