சென்னை மழைநீர் வடிகால் திட்டம்; வெற்றியா? தோல்வியா?

புதன், 2 நவம்பர் 2022 (11:55 IST)
சென்னையில் தற்போது பருவமழை காரணமாக மழை வெளுத்து வரும் நிலையில் மழைநீர் வடிகால் திட்டம் வெற்றி அடைந்ததா என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலம் வரும்போது பெரிதும் பாதிக்கப்படும் நகரம் சென்னை. சென்னையின் மக்கட் தொகையால் ஏராளமான குடியிருப்புகள் உள்ள நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் சென்னையின் பிரதான சாலைகள் தொடங்கி சின்ன சின்ன சந்து பொந்துகள் கூட மழை வெள்ள நீரால் சூழப்படும் பிரச்சினை தொடர் கதையாக இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்வதற்கான பணிகளை உடனடியாக தொடங்கியது. ரூ.120 கோடி செலவில் 45 கி.மீ நீளத்திற்கு இந்த மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் தொடங்கி தற்போது 75 சதவீதத்திற்கும் மேல் முடிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிற அமைச்சர்களும் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தனர்.

Gopalapuram, Source: Chennai Corporation


இந்நிலையில் பருவமழை காரணமாக சென்னையில் மழை வெளுக்க தொடங்கியுள்ளது. ஆனால் முந்தைய ஆண்டுகளை விட வெள்ளநீர் சூழ்வது குறைவதாக பொதுமக்களும், ஊடகங்களும் தெரிவித்துள்ளது. விடிய விடிய கனமழை பெய்தாலும் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ள பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்குள்ளாக மழை நீர் வடிந்து விடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேசமயம் வியாசர்பாடி உள்ளிட்ட சில பகுதிகளில் மழைநீர் சுரங்க பாதைகளை மூடியதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மழை நீர் வெளியேற்றும் பணிகளுக்காக ஆயிரம் மோட்டார் பம்புகளை தயாராக வைத்துள்ளதாக தெரிவித்திருந்தது. அதில் சுமார் 400 பம்புகள் மட்டுமே வெள்ள நீர் வெளியேற்ற பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த அளவுக்கு பல பகுதிகளில் மழை வெள்ளம் வேகமாக வடிந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

T Nagar, Source: Twitter - Chennai Corporation


ஆனால் இந்த திட்டம் குறித்த அதிருப்தி எதிர்கட்சிகள் உள்ளிட்ட சிலரிடம் நிலவுவதையும் காண முடிகிறது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பேசி வரும் சிலர் மழை இப்போதுதான் தொடங்கியுள்ளதால் நிலவரத்தை ஆரம்பத்தை வைத்தே சொல்லிவிட முடியாதென்றும், தொடரும் மழை காலங்களில் வடிகால்கள் செயல்படும் விதம் வைத்துதான் முடிவுக்கு வர இயலும் என கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் முந்தைய ஆண்டுகளை விட பல பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துள்ளதையும் பலர் ஒப்புக் கொண்டுள்ளனர்.

Perambur barracks road, Source: Twitter


எதிர்கட்சிகள் இந்த திட்டம் சரியான புரிதல் இல்லாமல் செயல்படுத்தப்பட்ட திட்டம் என்று விமர்சித்துள்ளன. இதுகுறித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் “சென்னை மழைநீர் வடிகால் திட்டம் அரைகுறை திட்டமாக உள்ளது. சிறிய மழைக்கே அமைச்சர்கள் ஓடுகின்றனர். வேலை நடப்பாதாக தெரியவில்லை” என்று கூறியுள்ளார். மேலும் பல எதிர்கட்சி பிரமுகர்களும் சென்னையில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளின் வீடியோவையும் ஷேர் செய்கின்றனர். இந்த திட்டத்தின் வெற்றி, தோல்வியை பணிகள் முழுவதும் முடிந்த பின்னர், மழைகாலம் முழுவதையும் கணக்கிட்டே சொல்ல முடியும் என்பது பலரது கருத்தாக உள்ளது.

Edited By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்