ரூ.890 கோடி அளவிற்கு பிஆர்பி நிறுவனம் கிரானைட் கொள்ளை - குற்றப்பத்திரிக்கையில் தகவல்

சனி, 20 ஆகஸ்ட் 2016 (15:58 IST)
கிரானைட் முறைகேடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில், பி.ஆர்.பி. நிறுவனத்தால் அரசுக்கு ரூ.890 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் அரசுக்கு பல்லாயிரம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
 
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான குழு விசாரணை நடத்தி, தங்களின் அறிக்கையையும் தாக்கல் செய்தது.
 
இதனிடையே மேலூர் பகுதிகளில் சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாகவும், அரசு நிலங்களில் அனுமதியின்றி கிரானைட் கற்களை அடுக்கி வைத்ததாகவும் பி.ஆர்.பி. உள்ளிட்ட பல கிரானைட் நிறுவனங்கள் மீது மதுரை மாவட்ட ஆட்சியர்களாக இருந்த சுப்பிரமணியன், அன்சுல் மிஸ்ரா ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.
 
இந்நிலையில், மாஜிஸ்திரேட் செல்வக்குமார் முன்னிலையில் இந்த வழக்குகள் வெள்ளியன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, அரசு வழக்கறிஞர் ஷீலா, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், ராஜாசிங் ஆகியோர் ஆஜராகி, பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் மீதான 2 ஆயிரத்து 933 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
 
அதில், பி.ஆர்.பி. நிறுவனம் சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது மற்றும் அனுமதியின்றி அரசு நிலங்களில் கிரானைட் கற்களை அடுக்கி வைத்ததன் காரணமாக அரசுக்கு மொத்தம் ரூ. 890 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்