கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாநில அரசுகள் பெரும் நிதி சிக்கலில் சிக்கியுள்ளன. மாநில பொருளாதார வளர்ச்சியை எட்ட பல மாநிலங்கள் தங்களுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி வரித்தொகை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஆகியவற்றை மத்திய அரசிடம் கோரி வருகின்றன. இந்நிலையில் 15வது நிதிக்குழுவின் கோரிக்கையை ஏற்று மாநில அரசுகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திற்கு ரூ.846 கோடியும், பீகாருக்கு ரூ.502 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ.330 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்திற்கும் ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக பொருளாதார உற்பத்தி கொண்ட மாநிலமாக விளங்கும் தமிழகத்திற்கு மீண்டும் நிதியை குறைத்து அளித்துள்ளதாக அரசியல் கட்சிகள் சில ஆதங்கம் தெரிவித்துள்ளன. விரைவில் இதுகுறித்து அரசியல் கட்சிகள் தங்கள் அறிக்கைகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னரே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்ட நிதியிலும் மற்ற மாநிலங்களை விடவும் தமிழகத்திற்கு குறைவான நிதியே வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.