ஆசிரமத்திற்கு சென்று விடுவேன் - நிர்மாலா தேவியின் பதிலால் அதிர்ச்சியடைந்த போலீசார்
செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (10:38 IST)
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த அருப்புக்கோட்ட கல்லூரி ஒன்றின் கணித பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை கவர்னர் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவும், சிபிசிஐடியும் தனித்தனியே விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவிக்க்கு துணை பேராசிரியர் முருகன் என்பவரும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவரும் உதவியதாக சிபிசிஐடி போலீசார் சந்தேகம் அடைந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட இருவரும் திடீரென தலைமறைவானதால் போலீசாரின் சந்தேகம் உறுதியானது. அதில், முருகன் மட்டும் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
நிர்மலா தேவியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார், நேற்று அருப்புக்கோட்டையில் உள்ள அவரின் வீட்டிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். வீட்டிற்குள் இருந்த முக்கிய ஆவணங்கள், கணிப்பொறி, பென் டிரைவ், மற்றும் அவரின் காரிலிருந்து ஒரு ரகசிய டைரியையும் போலீசார் கைப்பற்றினார். அதில், அவருடன் தொடர்பில் இருந்த பல விவிஐபிக்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் தொலைப்பேசி எண்கள் கிடைத்திருப்பதாகவும், அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகவும் நேற்று செய்திகள் வெளியானது.
இந்நிலையில், விசாரணையில் நிர்மலா தேவியின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நிர்மலா தேவியிடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்ய அவரின் கணவர் சரவணபாண்டியன் முடிவு செய்தார். ஆனால், தற்கொலை மிரட்டல் விடுத்து அதை தடுத்துள்ளார் நிர்மலா தேவி. மேலும், அதனால், மன அழுத்தம் ஏற்பட்டு கடந்த வரும் அவர் திடீரென மாயமாகிவிட்டார். ஒரு மாதமாகியும் அவர் வீடு திரும்பாததால் அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அப்போது மும்பையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் நிர்மலா தேவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் உறவினர்கள் அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அதன் பின்பும், சரவண பாண்டியனுக்கும் அவருக்கும் ஒத்துப் போகவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், போலீசாரின் விசாரணையின் போது, எனக்கு வாழப்பிடிக்கவில்லை. என்னை எல்லோரும் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், நான் மாட்டிக்கொண்டேன். நான் மீண்டும் ஆசிரமத்திற்கு சென்று விடுவேன் என நிர்மலா தேவி கூறினாராம்.
இந்த விவகாரம் பூதாகரம் ஆகியதைத் தொடர்ந்து, நிர்மலா தேவியின் கணவர் சங்கரபாண்டியன் தற்போது மீண்டும் நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.