தமிழகத்தில் உள்ள திமுக ஆட்சி, ஆட்சிக்கு வந்த 10 மாதங்களிலேயே மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 150% சொத்து வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து கரூர் மாவட்ட பாஜக சார்பில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்புறம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள், கரூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி முழக்கங்கள் எழுப்பினர். முன்னதாக மாநில மகளிரணி தலைவி மீனாட்சி சுந்தரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன், பேசும் போது திமுக கட்சி, ஆட்சிக்கு வரும் முன்னர் சொத்துவரியை உயர்த்த மாட்டோம் என்ற வாக்குறுதிகளை கொடுத்து விட்டு பின்பு ஆட்சிக்கு வந்த பின்னர் உடனடியாக 150 சதவிகிதம் சொத்துவரியினை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, இந்த சொத்துவரியினை உயர்த்தியதற்கு காரணம், மத்திய அரசு தான் காரணம் என்று தமிழகத்தில் உள்ள திமுக அமைச்சர் கே.என்.நேரு கூறி வருவதற்கு கரூர் மாவட்ட பாஜக சார்பில் மாபெரும் கண்டனத்தினையும் பதிவு செய்தார்.