சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி ஆகியோரை மாவட்ட அளவில் உள்ள சிறப்பு நீதிமன்றங்கள் விடுவித்து தீர்ப்பு அளித்தது.
இந்த நிலையில், 3 அமைச்சர்கள், 3 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்குகள் இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளில் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் தினசரி விசாரணை நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.
அரசியல்வாதிகளின் வழக்குகளால் பிற வழக்குகள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் பிற்பகல் 3 மணிக்கு மேல் நடைபெறும் என்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் விளக்கத்தை பதில் மனுவாகவோ, எழுத்துப்பூர்வமான வாதமாகவோ ஜனவரி 30க்குள் தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.