முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் : விஜயதாரணி ஆவேசம்

வியாழன், 16 ஜூன் 2016 (15:39 IST)
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில், பிடிவாரண்ட் பிறப்பித்தது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி “சட்டசபைக்கு முன் என்னை முடிந்தால் கைது செய்யட்டும்” என்று ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
2015ஆம் ஆண்டு கருங்கல் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி அவதூறாக பேசினார் என்று அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நடந்த போது பல முறை விஜயதாரணி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே அவருக்கு நாகர்கோவில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. 
 
இதுபற்றி கருத்து தெரிவித்த விஜயதாரணி “டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுவால் பல பெண்கள் பாதித்துள்ளனர். பல குடும்பங்கள் சீரழியை மதுவே காரணம். எனவே மதுக்கடைகளை மூட வேண்டும் நான் கருங்கலில் பேசினேன். இதில் என்ன தவறு? இதில் அவதூறு எங்கிருந்து வந்தது?. இப்போது பிடிவாரண்ட் வரை கொண்டு வந்து விட்டார்கள்.
 
மதுவிலக்கு கேட்டு போராடியது தவறா? தமிழகப் பெண்களின் கண்ணீரைத் துடைக்க குரல் கொடுப்பது பிழையா?. சட்டமன்ற கூட்டம் நாளை (இன்று) நடக்கிறது. காங்கிரஸ் கொறடாவாகிய நான், கண்டிப்பாக அங்கு செல்ல வேண்டும். எனவே வழக்கை ஒத்திவைக்குமாறு கேட்டேன். அதற்கு பின்பும் வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியுடன் பிடிவாரண்ட் வாங்கி, எனக்கு அவமானத்தை ஏற்படுத்த ஜெயலலிதாவின் தரப்பு நினைக்கிறதா என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 
நான் கண்டிப்பாக நாளை (இன்று) சட்டமன்றம் செல்வேன். முடிந்தால் என்னை அங்கு கைது செய்யட்டும். எது வந்தாலும் சரி, மதுவை எதிர்த்து குரல் கொடுப்பதை நிறுத்த மாட்டேன்” என்று உறுதியாக கூறினார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்