வரப்போகுது அம்மா திருமண மண்டபங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு!

சனி, 17 செப்டம்பர் 2016 (13:06 IST)
முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 11 இடங்களில் அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்படும் என அறிவித்துள்ளார். ஏழைகள் பயன்பெரும் பொருட்டு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.


 
 
அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா திரையரங்கம், அம்மா பேருந்து வரிசையில் அம்மா திருமண மண்டபமும் வர உள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை எளிய மக்கள், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை திருமண மண்டபங்களில் நடத்த வாடகையாக அதிகம் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் 'அம்மா திருமண மண்டபங்கள்' கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இந்த மண்டபங்களில் குளிர்சாதன வசதியுடன் கூடிய ஒப்பனை அறை, மணமகன் மற்றும் மணமகளுக்கான தனி அறைகள், விருந்தினந்களுக்கான அறைகள், விருந்து உண்ணும் அறை, சமையல் கூடம் என அனைத்து வசதிகளும் இருக்கும்.
 
இந்தத் திட்டம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் ஆகியவை மூலம் செயல்படுத்தவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
 
இத்திட்டமானது, தண்டையார்பேட்டை, வேளச்சேரி, அயப்பாக்கம், பருத்திப்பட்டு, பெரியார் நகர், கொரட்டூர், மதுரை மாவட்டத்தில் அங்ணாநகர், திருநெல்வேலி மாவட்டத்தில் அண்பாசமுத்திரம், சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் கொடுங்கையூர், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை ஆகிய 11 இடங்களில் 83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இந்த திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த இணைய தளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்