கள்ளக்காதலன் திருமணம் செய்ய மறுப்பு: நடுரோட்டில் தீக்குளித்த இளம்பெண்ணின் உருக்கமான கடிதம்

திங்கள், 20 ஏப்ரல் 2015 (12:20 IST)
திருநெல்வேலியில், கள்ளக்காதலன் திருமணத்துக்கு மறுத்ததால், மனவேதனை அடைந்த இளம்பெண் நடுரோட்டில் தீக்குளித்தார்.
 
நெல்லை பெருமாள்புரம் பேருந்து நிறுத்தத்தில், நேற்று காலை 9.30 மணி அளவில் இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். திடீரென நடுரோட்டுக்கு வந்த அந்த பெண், தன் கையில் வைத்திருந்த கேனை திறந்து மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
 
உடலில் எரியும் தீயுடன் அவர் அலறி துடித்தார். இதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெருமாள்புரம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பெண்ணின் உடலில் பற்றிஎரிந்த தீயை அணைத்தனர்.
 
இதனால், பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய அந்தப் பெண்ணை உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்தவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:–
 
தீக்குளித்தப் பெண் பாளையங்கோட்டையை சேர்ந்த முருகன் என்பவரது மகள் தீபா. அவருக்கு வயது 24. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்த அவருக்கும், குமார் என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு தர்ஷனி என்ற 2 வயது குழந்தை உள்ளது.
 
இந்நிலையில், பாளையங்கோட்டையை அடுத்த கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவருடன், தீபாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு வயது 22. அவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த விவகாரம் குமாருக்கு தெரிந்ததும், அவர் தீபாவை கண்டித்தார். ஆனால் தீபா கள்ளக்காதலை கைவிடாமல் கணவரை பிரிந்தார். 3 மாதங்களாக குழந்தையுடன் அவர் பெற்றோர் வீட்டில் வசித்துவந்தார்.
 
தீபாவுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் நாளடைவில் வெற்றிவேலுக்கு கசந்தது. தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வெற்றிவேலை தீபா வற்புறுத்தினார். ஆனால் அவர் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. இதனால் வேதனை அடைந்த தீபா தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. பெருமாள்புரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, வெற்றிவேலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தீபா வைத்திருந்த கைப்பையில் ஒரு கடிதம் இருந்தது.
 
தீபா அந்த கடிதத்தில் உருக்கமாக எழுதி இருப்பதாவது:–
 
கணவர், குழந்தையுடன் எனது வாழ்க்கை நிம்மதியாக போய்க் கொண்டு இருந்தது. நீ (வெற்றிவேல்) என்னிடம் முதன்முதலில் வந்து பேசியபோது, உன்னை தவிர்க்க நினைத்தேன். இதெல்லாம் வேண்டாம் என்று கூறினேன். விடாமல் என்னிடம் தொடர்ந்து பேசி வந்தாய்.
 
என் மனதை மாற்றினாய். உன்னை நம்பி வந்தேன். உன்னுடன் வாழ விரும்பினேன். உன் வார்த்தைகளை நம்பினேன். இப்போது என்னை நீ ஏற்க மறுத்து விட்டாய். இனி நான் உலகத்தில் வாழ்வதில் அர்த்தமில்லை. எனக்கு வாழ பிடிக்கவில்லை. என் காதல் உண்மையானது. இவ்வாறு அதில் எழுதப்பட்டுள்ளது.
 
இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தீபாவை குழந்தையுடன் ஏற்றுக் கொள்வதாக வெற்றிவேல் முதலில் கூறியிருக்கிறார். பின்னர் குழந்தையை விட்டுவிட்டு வந்தால் ஏற்றுக் கொள்வதாக கூறியிருக்கிறார். ஆனால், தீபா அதற்கு ஒப்புக் கொள்ளாததால் நழுவ முயற்சித்ததாக தெரியவந்துள்ளது.
 
மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்