இரட்டை இலை மற்றும் கட்சி பெயர் முடக்கம், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை என தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், தினகரன் மற்றும் சசிகலாவின் தலைமையின் கீழ் அதிமுக செயல்பட்டால் அது, அதிமுகவின் எதிர்காலத்தையே பாதிக்கும் என சில முக்கிய அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கருதுவதாகவும், அவர்கள், தினகரனை பதவி விலக வேண்டும் எனவும் வற்புறுத்தி வருவதாகவும் தெரிகிறது.
மேலும், தினகரனுக்கு எதிராக திரும்பியிருக்கும் அமைச்சர்களோடு, ஓ.பி.எஸ் அணியும் சுமூக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஒன்றாக இணைந்து அதிமுகவை கைப்பற்றும் முயற்சில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. இதற்காக தம்பித்துரை, வைத்திலிங்கம், தங்கமணி, வேலுமணி, சண்முகம் ஆகியவர்களை கொண்ட ஐவர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர்கள் மூலம் ரகசிய பேச்சு வார்த்தையில் இரு தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர் என செய்தி கசிந்துள்ளது.
மேலும், அப்படி நடக்கும் போது யாருக்கு என்ன பதவி, ஆட்சியை கவிழ்க்க தினகரன் திட்டமிட்டால் எப்படி சமாளிப்பது என்பது பற்றியெல்லாம அவர்கள் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
கட்சியை காப்பாற்ற வருகிற 18ம் தேதிக்குள் பதவி விலக வேண்டும் என அந்த ஐவர் குழு கெடு விதித்திருப்பதாகவும் தெரிகிறது. அப்படி தினகரன் பதவி விலக மறுத்தால், தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.