சசிகலாவுக்கு பை பை: பொதுக்குழு தீர்மானத்துடன் டெல்லியில் அமைச்சர்கள்!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (08:57 IST)
அதிமுகவில் பொதுச்செயலாளர் பிரச்சனை நீண்ட நாட்களாக நீடித்து வருகிறது. சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தவர்களே அவரது நியமனம் செல்லாது என தேர்தல் ஆணையத்துக்கு செல்ல விவகாரம் தற்போது தேர்தல் ஆணையத்தின் கையில் உள்ளது.


 
 
இந்த பிரச்சனையின் ஒரு பகுதியாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னமும் தற்காலிகமாக தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அதிமுகவினர் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.
 
இந்த சூழ்நிலையில் தனக்கு எதிரானவர்களை சசிகலாவால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சியில் இருந்தும் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வருகிறார். இதனை தடுக்க கடந்த 12-ஆம் தேதி இணைந்த எடப்பாடி, ஓபிஎஸ் அதிமுக அணிகள் அதிமுக பொதுக்குழுவை கூட்டினர்.
 
இந்த பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்தது செல்லாது, தினகரன் அறிவிப்புகளும் செல்லாது. பொதுச்செயலாளர் என்கிற பதவியே இனி கிடையாது. கட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
தற்போது சசிகலாவுக்கும், தினகரனுக்கும் ஒரேயடியாக பை பை சொல்ல பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல்களை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிட முடிவு செய்துள்ளனர். இதற்காக தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பொதுக்குழுவின் தீர்மான நகல்களைத் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையரிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்