கூடி கூடி பேசியும் யூஸ் இல்ல: 2 வேட்பாளர்களை அறிவிக்க தடுமாறும் அதிமுக!
வெள்ளி, 20 மே 2022 (09:02 IST)
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்று 1 மணி நேரம் ஆலோசனை நடத்தியும் அதிமுக முடிவெடுக்கவில்லை.
ராஜ்யசபா எம்பிக்களின் தேர்தல்:
தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பிக்களின் பதவி காலியாக இருக்கும் நிலையில் இந்த பதவிகளுக்கு ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணிக்கு 4 எம்பிக்களும், அதிமுக கூட்டணி 2 எம்பிக்களும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணியில் கிடைக்கும் 4 எம்பிக்களில் 3 எம்பிக்கள் திமுகவும், ஒரு எம்பி காங்கிரஸ் கட்சியும் பகிர்ந்து கொள்கின்றன. அதிமுகவுக்கு கிடைக்கும் 2 எம்பிக்களில் கூட்டணி கட்சிகளுக்கு எதுவும் இல்லை என்றாலும் அதிமுகவின் இரண்டு மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்? என தேர்வு செய்வதில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.
அதிமுகவின் இரண்டு மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்?
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்று தேர்வு செய்ய ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் நிர்வாகிகள் நேற்று 1 மணி நேரம் ஆலோசனை நடத்தியும் இதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
எடப்பாடி பழனிச்சாமி இரண்டு மாநிலங்களவை எம்பி பதவியும் தனது ஆதரவாளர்களுக்கே வழங்க வேண்டும் என்றும், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுக்ககே வழங்க வேண்டும் என்றும் கூறி வந்தனர். ஆனால் யாருக்கு வழங்குவது என்பது குறித்து முடிவு எடுக்கவில்லை.
பின்னர் கடைசியாக தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வழங்குவது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அவர்கள் யார் என்ற அறிவிப்பு மீண்டும் ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாமக மற்றும் பாஜக ஆதரவு:
இதனைத்தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளாக இருந்த பாமக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் ஆதரவு அறிவித்துள்ளன. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இந்த இரு கட்சிகளும் இல்லை என்றாலும் தற்போது மாநிலங்களவை எம்பி தேர்தலில் அதிமுகவுக்கு இரண்டு கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.