இரட்டை இலை விவகாரம் ; அதிமுகவிலிருந்து வெளியேறிய ஆர்த்தி

வியாழன், 23 மார்ச் 2017 (17:05 IST)
அதிமுகவில் தற்போது நடந்து வரும் பதவிப் போட்டி காரணங்களால் மனமுடைந்த நகைச்சுவை நடிகை ஆர்த்தி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.


 

 
தமிழ் சினிமாக்களில் நகைச்சுவை நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆர்த்தி. இவர் 2014ம் ஆண்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதன் பின் அதிமுகவின் இளம்  நட்சத்திரப் பேச்சாளர் என்ற பட்டப் பெயரோடு, தேர்தல் பிரச்சாரங்களிலும் கலந்து கொண்டு அதிமுகவிற்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார்.
 
இந்நிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தான் ராஜினாமா செய்வதாக, அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரனுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் “தற்போது அதிமுகவில் நடைபெறும் நிகழ்வுகள் என்னை புண்படுத்திவிட்டது. ஜெ.வின் மறைந்து 4 மாதங்களுக்குள் இரட்டை இலை சின்னத்திற்கும், கட்சியின் பெயருக்கும் களங்க ஏற்பட்டு விட்டது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதுதான் சுயலவாதிகளுக்கும், பதவி ஆசை பிடித்தவர்களுக்கும் கிடைத்த மாபெரும் பரிசு. ஜெ.வின் கனவை நாம் மறந்துவிட்டோம். அம்மா ஆட்சி என உதட்டளவில் உச்சரித்துவிட்டு அவருக்கு பிடிக்காத காரியங்களில் ஈடுபட்டு வருகிறோம். இது எனக்கு வேதனையை தருகிறது. 
 
அதிமுகவில் அரங்கேறும் கோஷ்டி பூசல் எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திற்காக சண்டை போடுவதை விட்டு விட்டு மக்களின் எண்ணத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். கட்சி சின்னத்தை மீட்டு அம்மாவின் ஆசியுடன் இடைத்தேர்தலை சந்தியுங்கள்” என ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்