மத்திய அரசு சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டில் கொண்டுவந்துள்ள புதிய வரைவு-2020 க்கு எதிராக சமூக ஆர்வலர்கள் பலர் குரல் எழுப்பி வருகின்றனர். இதனால் இயற்கை வளங்கள் அழியும் என அச்சம் நிலவுகிறது. அதேசமயம் பாஜகவினர் இதனால் பெரிய பாதிப்புகள் எதுவுமே இல்லை. விதிகளில் மட்டுமே சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. சிலர் தவறான தகவலை பரப்புகிறார்கள் எனவும் கூறி வருகின்றனர்.’
இந்நிலையில் சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு வரைவு குறித்து நடிகர் கார்த்தி நடத்தி வரும் உழவன் ஃபவுண்டேசன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்ட வரைவு சுற்றுசூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது போல தோன்றுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியாவின் இயற்கை வளங்கள், மலைகள், காடுகள் ஆகியவை அழிக்கப்படுவதற்கு அரசே அனுமதித்துவிட கூடாது என கேட்டுக்கொண்டுள்ள அவர், அறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்த்து தேவையான மாற்றங்களை புதிய வரைவில் கொண்டு வர வேண்டும் எனவும் அறக்கட்டளை சார்பாக கார்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.