வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் சார்பில் மரம் நடும் விழா! தமிழ்நாட்டில் ஒரே வாரத்தில் 1.52 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது

Prasanth Karthick

புதன், 10 ஜூலை 2024 (12:12 IST)
வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக ஜூலை 1 முதல் 7 வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடைப்பெற்றன. இதன் மூலம் தமிழகம் முழுவதிலும் 1,52,000 மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளன.


 
மக்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் தேசிய அளவில் ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரம் ‘வன மகோத்சவம்’ விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் நடைப்பெற்ற மரக்கன்றுகள் நடும் விழாக்கள் மூலம் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் உள்ள 86 இடங்களில், 472 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களில் மொத்தம் 1,52,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

காவேரி கூக்குரல் இயக்கம், தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள காவிரி வடிநிலப் பகுதிகளில் மரம் சார்ந்த விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது மற்றும் அது சார்ந்த வேளாண் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது. இதன் மூலம் 1,72,600 விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறி உள்ளனர். மேலும் விவசாய நிலங்களில் பெருமளவு மரக்கன்றுகளை நடுவதால் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிப்பு திறனும் மேம்படுகிறது.
இது சுற்றுச்சூழல் சார்ந்த பலன்களோடு விவசாயிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பொருளாதாரப் பலன்களையும் தருகிறது.

மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகள் பொருளாதார பலன்களை பெறுவதற்காக இவ்வியக்கம் சார்பில் மரப்பயிர் சாகுபடி, சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடி, உணவுக்காடு வளர்ப்பு, வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டுதல் போன்ற பல்வேறு பயிற்சிகளை மாநில அளவில் தொடர்ந்து நடத்தி வருகிறது. மேலும் உள்ளூர் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார அளவிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தபடுகிறது.

இவ்வியக்கம் பருவ மழைக் காலங்களில் விவசாய நிலங்களில் மரக்கன்றுகளை நடும் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபடுகிறது. அதனுடன் மரம் சார்ந்த விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டின் சில முக்கிய நாட்களில் மரம் நடும் விழாக்களை பெரிய அளவில் நடத்துகிறது. அந்த வகையில் வன மகோத்சவத்தின் போது மட்டுமின்றி உலக சுற்றுச்சூழல் தினம், காந்தி ஜெயந்தி, நதிகளுக்கு புத்துயிரூட்டும் தினம், நம்மாழ்வார், நெல் ஜெயராமன், மரம் தங்கசாமி போன்ற சூழலியல் முன்னோடிகளின் நினைவு நாட்களிலும் மாபெரும் மரம் நடு திருவிழாக்களை நடத்துகிறது. இவர்கள் மூவரும் ஈஷாவின் பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளில் ஆரம்பம் முதல் உறுதுணையாக இருந்து வழிகாட்டிகளாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஈஷா நாற்றுப்பண்ணைகள் மூலமாக இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விலை மதிப்பு மிக்க மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு 3 ரூபாய் மானிய விலையில் வழங்குகிறது.  மேலும் இப்பண்ணைகளில் மரக்கன்றுகள் வாங்கவும், இவ்வியக்கம் குறித்த கூடுதல் தகவல்களுக்கும் 80009 80009 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்