சென்னையில் 3 மையங்களில் வாக்கு எண்ணிக்கை; போலிஸ் பலத்த பாதுகாப்பு

செவ்வாய், 17 மே 2016 (15:22 IST)
சென்னையில் ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் வாக்குகள் எண்ணப்பட உள்ளதை அடுத்து அங்கு பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது.
 

 
அரவங்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர மற்ற 232 தொகுதிகளில் நேற்று திங்கட்கிழமை தேர்தல் நடந்து முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.
 
மின்வெட்டு மற்றும் இயந்திர கோளாறு காரணமாக ஒரு சில இடங்களில் பிரச்சனை ஏற்பட்டாலும் மற்ற இடங்களில் சுமூகமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கும் எண்ணும் மையங்களுக்கு பத்திரமாக கொண்டு செல்லப்பட்டன.
 
இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு முடிந்த பின்னர் ஓட்டு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் ஓட்டு எண்ணும் இடங்களுக்கு நள்ளிரவு கொண்டு செல்லப்பட்டன.
 
சென்னையில் 3 இடங்களில் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. ராணி மேரி கல்லூரியில் ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம் ஆகிய 5 தொகுதிகளின் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.
 
லயோலா கல்லூரி மையத்தில் பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய 6 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
 
அதேபோல அண்ணா பல்கலைக்கழகத்தில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மைலாப்பூர், வேளச்சேரி ஆகிய 5 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
 
ஓட்டு எண்ணக்கூடிய 3 மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு உட்பட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், கண்காணிப்பு கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்