தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததன் மூலமாக மதவாத சக்திகளுக்கு மரண அடி கொடுத்திருக்கிறார்கள் தமிழக மக்கள் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் அதுகுறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறது. அதில் சீமான் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததன் மூலமாக மதவாத சக்திகளுக்கு மரண அடி கொடுத்திருக்கிறார்கள் தமிழக மக்கள். ஈழத்துயரங்களுக்குத் தீர்வு கேட்டும் தனித் தமிழீழக் கோரிக்கையை ஆதரித்தும் மூவர் தூக்கு விவகாரத்தில் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தும் தமிழர் நலன் போற்றும் முதல்வராக திகழ்ந்த மாண்புமிகு ஜெயலலிதா அவர்களுக்கு அபரிவிதமான வெற்றியை ஈட்டிக் கொடுத்து வரலாற்றுப் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார்கள் தமிழக மக்கள்.
தமிழகத்தின் தேவைகளை நாடாளுமன்றத்தில் அழுத்தமாக முழங்கவும் தமிழக உரிமைகளைப் பாதுகாக்க உரியபடி போராடவும் அ.தி.மு.க.வே சரியான கட்சி என்பதை மக்கள் திட்டவட்டமாக தீர்மானித்திருக்கிறார்கள். மூன்றாவது அணி என்கிற பெயரில் பரப்பப்பட்ட பொய்ப் பிரசாரங்களுக்கு இடம் கொடுக்காமல் இனமானப் பிள்ளைகளாக மதவாத சக்திகளை வீழ்த்திக் காட்டி இருக்கிறார்கள் தமிழக மக்கள். ஈழக் கோரங்களை நிகழ்த்திய காங்கிரஸ் கட்சியையும் அதற்குத் துணை போன தி.மு.க.வையும் வேரோடு வீழ்த்திக் காட்டி நம் இனம் பட்ட ரணத்தின் வலியை தமிழக மக்கள் தக்கபடி திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள்.
பாரதீய ஜனதா கூட்டணி அகில இந்திய அளவில் வென்றாலும், தமிழகத்தில் அந்தக் கட்சி தளிர்விட முடியாத நிலையை வாக்காள பெருமக்கள் உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள். பல கட்சிகளை ஒருங்கிணைத்து பிரமாண்ட கூட்டணிபோல் காட்டியும் மோடி அலை என மூச்சடங்கப் பேசியும் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியால் எந்தவிதப் பலனையும் பெற முடியாமல் போய்விட்டது. இந்தியா முழுக்க எழுந்த மோடி அலை தமிழகத்தில் மட்டும் ஊதித்தள்ளப்பட்டதற்கு தமிழக மக்களின் அரசியல் தெளிவும் அறிவுமே காரணம்.
எந்தக் கட்சியையும் கூட்டணிக்கு அழைக்காமல் மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலைச் சந்தித்த தமிழக முதல்வருக்கு தமிழக மக்கள் நல்ல நம்பிக்கையைப் பரிசளித்திருக்கிறார்கள். இலையை ஆதரித்து தமிழகம் முழுக்க பரப்புரை செய்தபோதே அ.தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என நான் அழுத்தமாக முழங்கி வந்தேன். மாபெரும் வெற்றியை அடைந்திருக்கும் தமிழக முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழகத்தின் நலன் பேணும் நடவடிக்கைகளை முதல்வர் எந்நாளும் தொடர்வார் என்றும், நாடாளுமன்றத்திலும் மிகுந்த பலத்தோடு தமிழகத்துக்கான உரிமைகளை முழங்க வைப்பார் என்றும் நாம் தமிழர் கட்சி நம்புகிறது.
இதுகாலம் வரை மத்தியில் செல்வாக்கு இருந்தும் பதவி பகட்டுகளுக்காக ஈழம் தொடங்கி தண்ணீர் விவகாரம் வரை சுயநல நோக்கில் மட்டுமே செயல்பட்ட தி.மு.க.வை வீட்டில் உட்கார வைத்து தக்கபடி பதிலடி கொடுத்திருக்கும் தமிழக மக்கள் அறிவிற்சிறந்தவர்களாக தங்களை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். நியாயத்தின் வழி நின்று தக்க தீர்வை அளித்த தமிழக மக்களுக்கும் நாம் தமிழர் கட்சி மனமார்ந்த வாழ்த்துகளைச் சொல்லி மகிழ்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் குறிப்பிட்டுள்ளார்.