கோவில் திருவிழாவில் ஆபாச நடனம்

திங்கள், 1 ஜூலை 2013 (16:36 IST)
FILE
அரூரை அடுத்த முத்தானூரில் கோவில் விழாவில் ஆபாச நடனம் ஆடியதாக 2 பேரை காவல்துறையினர் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

அரூர் வட்டம், முத்தானூரில் மாரியம்மன் கோவில் திருவிழா இம் மாதம் 26 ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் நடன நிகழ்ச்சி நடத்த கிராம மக்கள் காவல்துறையில் அனுமதி கேட்டனர். ஆனால் காவல்துறையிலனர் அனுமதி அளிக்கவில்லை.

இதனால் விழா குழுவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதிப்பெற்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் விழாவில் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை காவல்துறையினர் வீடியோ படம் பிடித்தனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு வீடியோவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், நடன நிகழ்ச்சியில் ஆபசமாகவும், பெண்களை கேலியாக சித்தரிக்கும் வகையிலும் இருப்பது தெரியவந்தது.

இதனையெடுத்து நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாக, நடனக்குழு மேலாளர் சுபாஷ் (32), முத்தானூர் கிராமத் தலைவர் அம்மாசி (எ) திருப்பதி (49) ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முத்தானூர் ஊர்க்கவுண்டர் ராஜேந்திரன், கோயில் தர்மகர்த்தா சக்கரவர்த்தி, பொங்களூர் மல்லிக்கரையைச் சேர்ந்த ராஜி மனைவி அமிர்தா, சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி அழகுஜோதி ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். இச்சம்பவம் குறித்து அரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்