ராமேஸ்வரம் மீனவர்களின் காவல் 4ஆவது முறையாக நீட்டிப்பு

திங்கள், 6 மே 2013 (17:10 IST)
இலங்கை கடற்படையால் கடந்த மாதம் முதல் வாரத்தில் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் காரைக்கால் மீனவர்களின் காவலை அனுராதபுரம் நீதிமன்றம் 4ஆவது முறையாக நீட்டித்து உத்தரவிட்டது.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் காரைக்கால் மீனவர்களின் காவல் வரும் 20ஆம் தேதி வரை 4ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காரைக்கால் மீனவர்கள் 26 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 5ஆம் தேதி காரைக்கால் மீனவர்களும், 6ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிறைப்பிடிக்கப்பட்டனர்.

மீனவர்களை விடுதலை செய்வதற்காக கடற்படைத் தளத்திலிருந்து உரிய ஆவணங்கள் அளிக்கப்படாததால், அவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஒரு மாதம் கடந்த நிலையில், இன்று மீனவர்கள் விடுதலையாவார்கள் என்ற நம்பிக்கையோடு இருந்த அவர்களின் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்