க‌ற்ப‌ழி‌த்து என்ஜினீயரிங் மாணவி எரித்துக்கொலை?

செவ்வாய், 22 ஜனவரி 2013 (11:10 IST)
FILE
கல்லூரிக்கு சென்ற என்ஜினீயரிங் மாணவி சாலையோர‌த்த‌ி‌ல் எரித்துக்கொலை செய்யப்பட்ட ச‌ம்பவ‌‌ம் கோவை‌யி‌ல் பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. மாண‌வி உட‌‌ல் முழுவது‌ம் நகக்கீறல்கள் காணப்படுவதா‌ல் அவ‌ர் க‌‌‌ற்ப‌ழி‌த்து கொலை செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌க்கல‌ா‌ம் எ‌ன்ற கோண‌த்‌தி‌ல் போ‌லீசா‌ர் ‌விசாரணையை தொட‌ங்‌கியு‌ள்ளன‌ர்.

ஈரோடு மாவட்டம், சிவகிரியில் ஈரோடு செல்லும் ரோட்டின் ஓர‌த்‌தி‌ல் நே‌ற்று காலை இளம்பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து சிவகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தின‌ர்.

உடல் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக யாரோ அவசர அவசரமாக நள்ளிரவில் உடலை அங்கு கொண்டுவந்து எரித்து இருக்கிறார்கள். ஆனால் பனிப்பொழிவின் காரணமான தீ அணைந்து உடல் முழுமையாக கருகாமல், முகம் நன்றாக அடையாளம் தெரிந்தது. இறந்து கிடந்த பெண்ணின் உடல் அருகே கருகிய நிலையில் ஒரு செல்போன் கிடந்தது. போலீசார் அதை கைப்பற்றி, அந்த செல்போனில் இருந்த சிம்கார்டு மூலம் விசாரணையை தொடங்கினர்.

அப்போது சிவகிரி அருகே உள்ள கோட்டைகாட்டு புதூர் கிராமத்தை சேர்ந்த நல்லசிவம் என்பவரின் பெயரில் அந்த சிம்கார்டு வாங்கப்பட்டது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். நல்லசிவம், அவருடைய மனைவி லோகநாயகி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அவர்கள் உடலை பார்த்து, 'எங்களுடைய மகள் நந்தினி தான் இது, இப்படி பிணமாக கிடக்கிறாளே' என்று கதறி அழுதனர்.

நல்லசிவத்துக்கு ரூபினி, நந்தினி (19) என்ற 2 மகள்கள் உள்ளனர். ரூபினி பெங்களூரில் என்ஜினீயராக பணிபுரிகிறார். நந்தினி கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்காக நந்தினி பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார்.

பின்னர் கல்லூரிக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் மதியம் சிவகிரி பஸ் நிலையத்துக்கு வந்தார். அவரை வழி அனுப்புவதற்காக தாயார் லோகநாயகியும் அவருடன் பஸ்நிலையம் வந்தார். அப்போது நந்தினி, 'நான் பஸ் ஏறிக்கொள்கிறேன், நீங்கள் வீட்டுக்கு செல்லுங்கள்' என்று கூறியுள்ளார். அதனால் லோகநாயகி வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அத‌ன் பின்னர் 3 மணி நேரம் கழித்து நல்லசிவத்துக்கு நந்தினி போன் செய்து, ''நான் கோவைக்கு வந்துவிட்டேன்'' என்று தகவலும் கூறி இருக்கிறார். இந்தநிலையில் அவர் எப்படி சிவகிரியில் பிணமாக கிடந்தார்? அவரை கொடூரமாக கொன்றது யார் ? என்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

நந்தினியின் உடலில் ஆங்காங்கே நகக்கீறல்கள் காணப்படுகின்றன. அதனால் கொலை செய்யப்படுவதற்கு முன் நந்தினி கற்பழிக்கப்பட்டாரா? அல்லது நந்தினி உடன்படாததால் இந்த கொலை நடந்ததா? இல்லை காதல் விவகாரமா? என்று பல கோணங்களில் போலீசார் விசாரணையை தொட‌ங்‌கியு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்