மத்திய அமைச்சர் அழகிரியால் எந்த நன்மையும் இல்லை-விவசாயிகள்
வியாழன், 3 நவம்பர் 2011 (14:40 IST)
தமிழகத்தைச் சேர்ந்த மு.க.அழகிரி மத்திய உர அமைச்சராக இருந்தும் எந்த பயனும் இல்லை; என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் பெ. சண்முகம்.
இயற்கை இடர்ப்பாடுகளுக்கு விவசாயிகள் பொறுப்பாக முடியாது என்பதால் ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் விவசாயிகள் கொண்டு வரும் நெல் அனைத்தையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
உர விலை கடுமையாக உயர்ந்துள்ளதற்கு காரணம் மத்திய அரசின் தவறான உரக் கொள்கையே. உர விலை உயர்வின் விளைவாக உர நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள், வியாபாரிகள் பெருமளவு லாபம் அடைந்து வருகிறார்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த மு.க.அழகிரி மத்திய உர அமைச்சராக இருந்தும் தமிழகத்துக்குத் தேவையான உரங்களை திமுக அரசு பெற்றுக்கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உரத்தட்டுப்பாட்டை பயன்படுத்தி சில்லரை வியாபாரிகள் விலையை உயர்த்தி விற்று லாபம் அடைகிறார்கள்.
இந்த செயற்கையான உரவிலை உயர்வைத் தடுக்க தமிழக அரசு விரைவான நடவடிக்கையை எடுக்க வேண்டும். மத்திய அரசு உரவிலை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதிமுக அரசு தேர்தலின் போது சன்ன ரகத்துக்கு ரூ. 70, பொது ரகத்துக்கு ரூ. 50 விலை உயர்வை அறிவித்தது. உரவிலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் நெல்லுக்கான ஊக்கத் தொகை மிகமிக குறைவு.
நெல்குவிண்டாலுக்கு ரூ.1,500 கிடைக்க தமிழக அரசு உத்திரவாதம் அளிக்க வேண்டும். மழையின் காரணமாக நெல்கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
2010௨011 ஆம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீடு தொகை டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் முழுவதும் வழங்கப்படாமல் உள்ளன. எனவே தமிழக அரசு மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ. 265 கோடி பிரிமீயத் தொகையை உடனடியாக செலுத்தி பயிர்க்காப்பீடுத் தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் தஞ்சாவூரில் 19-ம் தேதி அனைத்து விவசாய சங்கங்களையும் அழைத்து கூட்டம் நடைபெறவுள்ளது என்றார் சண்முகம்