தனது நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்காதது, அதிக நேரம் தொழிலாளர்களை வேலை வாங்குவது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி கொங்குநாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கு தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தாக்கீது அனுப்பியுள்ளது.
கொங்கு நாடு முன்னேற்ற கழக தலைவரான பெஸ்ட் ராமசாமிக்கு திருப்பூர் அனுப்பர்பாளையம், தாராபுரத்தில் உள்ள நூற்பாலைகள், ஜவுளி உற்பத்தி நிறுவனங்களில் வெளியூர்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
அனுப்பர்பாளையத்தில் உள்ள நூற்பாலையில் வேலை செய்து வந்த சேலம் மாவட்டம் கெங்கவல்லி கிராமத்தை சேர்ந்த சவரியம்மாள் (25) என்ற இளம் பெண் கடந்த 14ஆம் தேதி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தோல் வியாதி காரணமாக சவரியம்மாள் இறந்ததாக கூறி வழக்கை முடித்துக் கொண்டது காவல்துறை.
இந்த நிலையில் சவரியம்மாள் சாவுக்கு தொழிலாளர்களின் நலன் பேணப்படாததே காரணம் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியனுக்கு தொழிற்சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து தொழிலாளர் நலத்துறை இணை தலைமை ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், பெஸ்ட் ராமசாமியின் நிறுவனத்தில் சோதனை நடத்தி தொழிலாளர்களிடமும் விசாரணை மேற்கொண்டார். அப்போது, வசதிகள் ஏதும் தொழிலாளர்களுக்கு செய்து கொடுக்காதது, அதிக நேரம் தொழிலாளர்களை வேலை வாங்குவது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து உரிமையாளர் பெஸ்ட் ராமசாமி, யூனிட் மேலாளர் சார்லஸ் செல்லதுரை ஆகியோருக்கு தகுந்த விளக்கம் கேட்டு தொழிலாளர் துறையினர் தாக்கீது வழங்கினார். அவர்கள் அளிக்கும் விவரங்களை பொறுத்து பெஸ்ட் ராமசாமி, சார்லஸ் செல்லதுரை ஆகியோர் மீது முறைப்படி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே தனது மீதான குற்றச்சாற்றை பெஸ்ட் ராமசாமி மறுத்துள்ளார், ''அரசியல் காரணங்களுக்காக என்னை குறி வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக நினைக்கிறேன்'' என்று குற்றம்சாற்றியுள்ளார்.
''எனது நிறுவனத்தில் 3 ஆயிரம் தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள். அனைத்து அடிப்படை வசதிகளுடன் தங்கும் விடுதி கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.