தடையை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் நடராஜ் மனு
வியாழன், 23 ஜூன் 2011 (11:14 IST)
தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக லத்திகா சரணை நியமித்தது செல்லாது என்ற நிர்வாகத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்று ஆர். நடராஜ் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக லத்திகா சரணை நியமித்ததை எதிர்த்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை முன்னாள் இயக்குநர் ஆர். நடராஜ் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் மனு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், லத்திகா சரணை டி.ஜி.பி.யாக நியமித்தது செல்லாது என்று உத்தரவிட்டது. தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லத்திகா சரண் மனு செய்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், நிர்வாகத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு கடந்த மே 31ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில், இந்தத் தடையை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஆர். நடராஜ் மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகக் காவல் துறையில் எனது பணி அனுபவம், பணிக் காலச் சாதனைகள், நான் வாங்கிய பதக்கங்கள் போன்றவை அடிப்படையில் நான்தான் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எனது இந்தத் தகுதிகள் பற்றி தனது மனுவில் எதுவும் குறிப்பிடாமல் லத்திகா சரண் வேண்டுமென்றே மறைத்துள்ளார்.
எனவே, லத்திகா சரண் நியமனம் செல்லாது என்ற நிர்வாகத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எலிப் தர்மாராவ், எம். வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட அமர்வு, இப்போது ஆர்.நடராஜை டி.ஜி.பி.யாக நியமிக்க முடியுமா? ஓய்வு பெற்ற பிறகு அரசு பதவி குறித்து அவருக்கு என்ன உரிமை உள்ளது? ஓய்வு பெற்ற பிறகு அரசுப் பதவி கேட்பதில் ஒருவருக்கு என்ன உரிமை இருக்கிறது?' என்று கேட்டனர்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு 3 வார காலஅவகாசம் வேண்டுமென்று அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். இந்த வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அதுவரை தீர்ப்பாயத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்படுவதாக உத்தரவிட்டனர்.