புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு: விசாரணைக் குழு நியமனம்

புதன், 22 ஜூன் 2011 (20:17 IST)
முந்தைய திமுக ஆட்சி காலத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து ஆராய விசாரணைக் குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில், சென்னை அண்ணா சிலை அருகேயுள்ள ஓமந்தூரார் தோட்டத்தில் சுமார் 1000 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது.

இந்நிலையில், புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்ததோடு, கடந்த மே மாதம் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடனேயே தலைமை செய்லகத்தை மீண்டும் பழைய ஜெயின்ட் சார்ஜ் கோட்டைக்கே மாற்றிவிட்டார்.

அத்துடன் புதிய தலைமைச் செயலகம் செயல்பட்ட கட்டிடம், வேறு ஏதாவது அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து ஆராய ஒரு நபர் விசாரணைக் குழு ஒன்றை அமைத்து, தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி தங்கராஜ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழு, 3 மாத காலத்திற்குள் தமிழக அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



வெப்துனியாவைப் படிக்கவும்