ப‌ன்‌னீ‌‌ர் செ‌ல்வ‌ம் ‌உ‌ள்பட 4 பே‌ர் மீது கருணா‌நி‌தி தொடர்ந்த அவதூறு வழக்கு திரும்ப பெற‌ப்படுமா? இன்று தீர்ப்பு

புதன், 22 ஜூன் 2011 (09:21 IST)
அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், வழ‌க்க‌றிஞ‌ர் பிரிவு செயலாளர் பி.எச்.மனோஜ்பாண்டியன் ஆகியோர் மீது‌ ‌தி.மு.க. தலைவ‌ர் கருணாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கை திரும்பப் பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது.

முதலம‌ை‌ச்சராக இருந்தபோது கருணாநிதி சார்பில் சென்னை நகர அரசு குற்றவியல் வழ‌க்க‌றிஞ‌ர் ஷாஜகான், சென்னை முதன்மை அம‌ர்வு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார், மனோஜ்பாண்டியன் ஆகியோர் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். 'அரசுத் துறைகள் இடமாற்றம் என்ற பெயரில் முக்கிய கோப்புகளை அழிக்க முயற்சி செய்வதால், ஜார்ஜ் கோட்டையில் மத்திய படைகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்' என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசை காபந்து அரசு என்று குறிப்பிட்டுள்ளனர். இது காபந்து அரசு இல்லை என்று நன்றாகத் தெரிந்தும் கேவலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அப்படி குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் குற்றச்சா‌‌ற்றுகள் அனைத்தும் பொய்யானவை, ஆதாரமற்றவை என்பதால் அவதூறு செய்த குற்றத்துக்காக அவர்களை தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை கட‌ந்த ஏ‌ப்ர‌ல் 29ஆ‌ம் தே‌தி ‌விசா‌ரி‌த்த சென்னை முதன்மை அம‌‌ர்வு ‌நீ‌திம‌ன்ற‌ம் நீதிபதி பி.தேவதாஸ், குற்றம்சா‌ற்றப்பட்டுள்ள 4 பேரும் ஜூ‌ன் 22ஆ‌ம் தே‌தி ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஆஜராக உத்தரவி‌ட்டிரு‌ந்தா‌ர்.

இத‌ற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவதற்கான அரசாணையை அரசு பிறப்பித்தது.

இந்த நிலையில் 4 பேர் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாகக் கூறி, அரசாணையை சென்னை நகர குற்றவியல் அரசு வழ‌க்க‌றிஞ‌ர் ஜெகன், முதன்மை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் க‌ட‌ந்த 17ஆ‌‌ம் தேதி தாக்கல் செய்தார். மேலும் இந்த வழக்கை முன்னதாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

அதைத் தொடர்ந்து இந்த வழக்கு 20ஆ‌ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. 20ஆ‌ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார், மனோஜ்பாண்டியன் ஆகியோர் ஆஜராகவில்லை. ஆஜராக விலக்கு அளிக்கக்கோரி அவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.தேவதாஸ், வழக்கில் 22ஆ‌ம் தேதி (இன்று) தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்