கொழும்பு கப்பல் சேவையை ரத்து செய்ய ஜெயலலிதா வலியுறுத்தல்

புதன், 15 ஜூன் 2011 (09:36 IST)
தூத்துக்குடி-கொழும்பு இடையே தொடங்கப்பட்டுள்ள கப்பல் சேவையை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து, பிரதமரிடம் அவர் நேரில் கோரிக்கை மனு அளித்தார்

"தூத்துக்குடி-கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இலங்கையில் இனப்பிரச்னை ஏற்பட்ட நிலையில், இந்தச் சேவை 1983-ம் ஆண்டில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. உகந்த சூழல் இல்லாத நேரத்தில் இப்போது மீண்டும் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கப்பல் சேவையை மீண்டும் தொடங்க 2004-ம் ஆண்டிலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது முதல்வராக இருந்த நான், இந்தத் திட்டம் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என எதிர்ப்புத் தெரிவித்தேன்.

இலங்கையில் அமைதி திரும்பவும், அங்கு அரசியல் தீர்வு ஏற்படும் வரையிலும் பயணிகள் கப்பல் சேவை பற்றிச் சிந்திக்கக்கூடாது என மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தேன்.

இப்படிப்பட்ட சூழலில், தமிழக சட்டப் பேரவையில் அண்மையில் கொண்டு வரப்பட்டத் தீர்மானத்தில், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்துக்கு தமிழகத்தின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த மக்களிடம் இருந்தும் வரவேற்புகள் வந்துள்ளன.

இந்தத் தருணத்தில் தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்குவது உகந்ததாக இருக்காது. இது, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவே இருக்கும்.

தமிழகத்தில் கடந்த மாதம் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசிடம் இந்தத் திட்டம் குறித்து எந்த ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, மக்களின் உணர்வுகளுக்கு எதிராக உள்ள தூத்துக்குடி-கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை ரத்து செய்ய வேண்டும் என தனது மனுவில் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதே போன்று, பஞ்சுகளை அதிகளவில் ஏற்றுமதி செய்வதால் தமிழகத்தில் உள்ளூர் ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஏற்றுமதிக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் ஜவுளித் தொழிலுக்குத் தேவையான பஞ்சை கிடைக்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தனது கோரிக்கை மனுவில் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்