மழை, வெ‌ள்ள பாதிப்பு : அதிகாரிகள் ஆய்வு!

ஞாயிறு, 5 டிசம்பர் 2010 (17:32 IST)
வடகிழக்குப் பருவ மழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேத மதிப்பு குறித்து அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தினர்.

அதிகம் பாதிக்கப்பட்ட கடலூர், காட்டுமன்னார் கோயில் வெள்ள சேதங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், பின்னர் தஞ்சையில் பயிர் சேதங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.

தஞ்சையில் மட்டும் சுமார் 27,000 எக்டேர் அளவில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தகுத்த நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

த‌ஞ்சை மாவ‌ட்ட‌த்‌தி‌ல் சுமார் 500 கி.மீ. சாலைகள் சேதம் அடைந்துள்ளதாகத் தெரிவித்த அதிகாரிகள், இதுகுறித்து அறிக்கை முதலமைச்சரிடம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

இதேபோல கடலோர மாவ‌ட்ட‌ங்க‌ள், வெ‌ள்ள பா‌தி‌ப்பு மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் அ‌திகா‌ரிக‌ள் இ‌ன்று ஆ‌ய்வு நட‌த்‌தின‌ர்.

வரும் 7ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூடி சேத அறிக்கை குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.

இதற்கிடையே திருவாரூரில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தை அடுத்து சமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வரும் திருவாரூர், கடலூர், நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்