பச்சைப் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
புதன், 28 ஏப்ரல் 2010 (10:49 IST)
மதுரை சித்திரை திருவிழாவில் பச்சைப் பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கிய நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அழகர் கோயில் உள்ள சுந்தரராஜர் பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர், பள்ளகிரி, திருப்பதி, சுந்தராஜபட்டி, போந்தபாளையம், புதூர் ஆகிய மண்டப படிகளில் நேற்று இரவு முழுவதும் எழுந்தருளினார்.
அதனைத் தொடர்ந்து இன்று காலை மதுரை வந்தடைந்த அழகர், தங்க குதிரை வாகனத்தில் எழுந்து பச்சைப் பட்டு அணிந்து காலை 7.03 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கினார்.
அப்போது கூடியிருந்த பக்தர்கள் எழுப்பிய நமோ நாராயணா.... கோவிந்தா.... கோவிந்தா என்று சரண முழக்கங்கள் விண்ணை எட்டின. பின்னர் பக்தி பரவசத்துடன் அழகரை தரிசம் செய்தனர்.
அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை காண விருதுநகர், தேனி, திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.
அழகர் பச்சை பட்டு அணிந்திருந்ததால் வரும் நாட்களில் செல்வம் மற்றும் வளம் பெரும் என்பது மதுரை சுற்றுவட்டார மக்களின் நம்பிக்கை. திருவிழாவின் தொடர்ச்சியாக நண்பகல் 11 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் அழகருக்கு தண்ணீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.