இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக தொழிற்சாலைகள்: மு.க.ஸ்டாலின்
புதன், 17 மார்ச் 2010 (09:56 IST)
''இந்திய மாநிலங்களிலேயே அதிக தொழிற்சாலைகள் தமிழகத்தில் தான் உள்ளன'' என்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்திய தொழிலக கூட்டமைப்பின் (பிக்கி) தமிழ்நாடு பிரிவு சார்பில் தயாரிக்கப்பட்ட, தமிழகத்தில் தொழில் தொடங்குவதன் நன்மைகளை விளக்கும் 'அட்வான்டேஜ் தமிழ்நாடு' என்னும் நூல் வெளியீடு நிகழ்ச்சி, சென்னையில் நடைபெற்றது.
அந்த நூலை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு பேசுகையில், தமிழகத்தில் மொத்தம் 21 ஆயிரத்து 42 தொழிற்சாலைகள் உள்ளன. தொழிற்சாலைகள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
அதேபோல், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் தமிழகத்தில்தான் அதிகம். 15 லட்சத்து 49 ஆயிரம் தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர். வெளிநாட்டு நிறுவன முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் மாநிலமாகவும் தமிழ்நாடு உள்ளது.
தமிழ்நாட்டில் செய்யப்படும் முதலீடுகள் 2006 ஜூலை முதல் 2009 டிசம்பர் வரை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. சர்வதேச பொருளாதார தேக்க நிலை நிலவியபோதிலும் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. தொழில்மயமாக்கலில் தமிழகத்தின் பொற்காலம் என்றே இதைக் கூறலாம்.
தென்மாவட்டங்களில் தொழில் முதலீட்டை ஊக்குவிக்க சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, மானாமதுரையில் வீடியோகான் தொழிற்சாலை (ரூ.1,600 கோடி முதலீடு), மதுரை மற்றும் சிவகங்கையில் சுந்தரேஸ்வரர் அல்லாய்ஸ் ஸ்டீல்ஸ் தொழிற்சாலை (ரூ.2,200 கோடி முதலீடு), கங்கை கொண்டானில் ஏடி.சி. டயர்ஸ் தொழிற்சாலை (ரூ.400 கோடி) தொடங்கப்பட உள்ளன.
இந்த நிதியாண்டிற்குள் தமிழ்நாட்டில் ஈர்க்கப்பட்ட மொத்த முதலீட்டின் மதிப்பு ரூ.60 ஆயிரம் கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்துறையினர் தமிழ்நாட்டில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை பயன்படுத்தி, மாநிலத்தின் வளர்ச்சியில் பங்கு பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.