''தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை'' என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார்.
புதிய சட்டப்பேரவை, தலைமைச் செயலக கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள 6 ஆயிரம் தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் கருணாநிதி நேற்று விருந்தளித்தார்.
பின்னர் புதிய சட்டமன்ற வளாகம் உருவாக காரணமாக இருந்த அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள், தொழிலாளர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் கருணாநிதி பேசுகையில், இந்த நிகழ்ச்சி கடந்த பல நாள்களாக நாம் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு கிடைத்துள்ள வெற்றியைப் பாராட்டி மகிழவும், இந்த வெற்றிக்குப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றி சொல்லவும் நடைபெறுகின்ற நிகழ்ச்சி.
பீகார், பஞ்சாப் போன்ற பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு, மகிழ்ச்சிப் பெருவெள்ளத்திலே எங்களையும் ஆழ்த்தி, அவர்களும் ஆழ்ந்திருக்கிறார்கள். தொழிலாளர்களும், அரசு அலுவலர்களும், ஒப்பந்ததாரர்களும், உங்களோடு சேர்ந்து அமைதியை உருவாக்கப் பாடுபட்ட காவல்துறையினரும் இன்றைக்கு மகிழ்கின்றனர்.
மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவரவர்களுக்கு தெரிந்த, விரும்புகிற மாநிலத்துப் பாடல்களை இங்கே பாடினார்கள். "ஹிந்திப் பாடல்களைப் பாடுகிறார்களே'' என்று பத்திரிகையாளர் ராம் சொன்னார். பாட்டுக்கு ஹிந்தி பரவாயில்லை; தமிழ்நாட்டுக்கு அது தேவையில்லை என்று நான் நினைத்துக் கொண்டேன்.
மற்ற மாநிலங்களோடு உறவு கொள்கிற, தொடர்பு கொள்கிற கருவியாக மொழி இருந்தால் அதில் தவறில்லை. ஒரு மொழிக்காரர்கள், இன்னொரு மொழிக்காரர்களை ஆதிக்கம் செலுத்துகிற நிலையைத் தான் நாங்கள் விரும்புவதில்லை. ஆனால், அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களான நீங்கள் விரும்பிக் கேட்ட ஹிந்திப் பாடல்களை இங்கே பாடியிருக்கிறார்கள்.
அதேபோல், தமிழ்ப் பாடல்களை பாடும் போது நீங்கள் யாரும் வெறுத்திடவில்லை; வரவேற்றீர்கள். இப்படி, ஒருவருக்கு ஒருவர் உறவு செலுத்த வேண்டுமே தவிர, ஆதிக்கம் செலுத்தும் நிலை கூடாது என்பதுதான் எங்களுடைய கொள்கை.
இந்த உன்னதமான கட்டடத்தைக் கட்டி முடிக்கக் காரணமான அரசு அலுவலர்களும், ஒப்பந்தக்காரர்களும், வடிவமைத்தவர்களும், வடிவமைப்புக்கு உரியவாறு பணியாற்றியவர்களும், குறிப்பாக எந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய உங்களுக்கும் அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தக் கட்டடம் எழிலோடு அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் நாள்தோறும் நான் இங்கே வருவதுண்டு. அப்படி வரும்போது, இங்குள்ள மேலாளர்களை, செயலாளர்களை நான் தூண்டிவிட்டு, பல திருத்தங்களை செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு எல்லாம் தொந்தரவு கொடுத்திருக்கிறேன். இதை நான் புரிந்துகொள்ளாமல் இல்லை. இந்த உயர்ந்த கோபுரம் இமயத்தின் வரையில் உள்ளவர்களும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது என்று முதலமைச்சர் கருணாநிதி பேசினார்.