டயோசிசன் பணத்தை செலவிட பிஷப் தேவசகாயத்திற்கு தடை

புதன், 9 டிசம்பர் 2009 (12:26 IST)
வழக்கு செலவுகளுக்காக டயோசிசன் பணத்தை செலவிடக்கூடாது என்று பிஷப் தேவசகாயத்திற்கு மாநகர உ‌ரிமை‌யிய‌ல் ‌நீ‌திம‌ன்ற‌‌ம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தென்னிந்திய திருச்சபையின் (சி.எஸ்.ஐ.) சென்னை பேராயத்தின் பேராயராக 2.5.99 அன்று வி.தேவசகாயம் (60) பொறுப்பேற்றார். அப்போது, இந்த பதவியை 10 ஆண்டுகள் (1.5.2009 வரை) மட்டுமே வகிப்பதாக சி.எஸ்.ஐ.யின் பிரதம பேராயமான `சினாட்'டிடம் தேவசகாயம் எழுதிக்கொடுத்திருந்தார்.

ஆனால், 10 ஆண்டுகள் முடிந்த பிறகும் பேராயர் பதவியில் இருந்து தேவசகாயம் விலகவில்லை. இதை எதிர்த்து சி.எஸ்.ஐ. சபை உறுப்பினர் சங்கம் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழக்கு தொடர்ந்தது. வழ‌க்கை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌‌திம‌ன்ற‌ம் இடை‌க்கால தடை ‌வி‌தி‌த்தது. தேவசாயம் பதவி காலம் முடிந்துவிட்டதால் அடுத்த பேராயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் காபந்து பேராயராகத்தான் நீடிக்க வேண்டும் என்று பேராய‌ர் சினாட் உத்தரவிட்டா‌ர்.

இடைக்கால தடையையும், சினாட் உத்தரவையும் எதிர்த்து உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தேவசகாயம் வழக்கு தொடர்ந்தார். ஆனால், சினாட் உத்தரவை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தேவசகாயம் மே‌ல்முறை‌யீடு செய்தார். இந்த வழக்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில் தனிப்பட்ட முறையில் அவர் தனக்காக நடத்தும் வழக்குகளுக்கு திருச்சபையின் பணத்தை எடுத்து செலவழிக்கிறார் என்றும், வழக்கு செலவுக்காக ரூ.40 லட்சம் பணத்தை பேராயத்தில் இருந்து ஒதுக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களை வைத்து நடத்தப்பட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றும் தேவசகாயத்தின் எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், சி.எஸ்.ஐ. கல்வாரி சர்ச் பாஸ்டரேட் தலைவர் எஸ்.டி.சவுந்திரராஜன் பாதிரியார், சென்னை மாநகர உ‌ரிமை‌யிய‌ல் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ''தேவசகாயம் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்ந்துள்ளார். பல்வேறு சொந்த வழக்குகளையும் அவர் எதிர்கொண்டு வருகிறார். இந்த நிலையில், வழக்கு செலவுகளுக்காக சென்னை சி.எஸ்.ஐ. டயோசிசன் பணத்தை செலவிடக்கூடாது. அவ்வாறு அவர் செலவிடுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.

நீதிபதி இந்த வழக்கை விசாரித்து, பிஷப் தேவசகாயம் வழக்கு செலவுகளுக்காக டயோசிசன் பணத்தை வரும் 14ஆ‌ம் தேதி வரை செலவிடக்கூடாது என்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்