ராஜபக்ச வருகையை கண்டித்து திருப்பதி தேவஸ்தானம் முன் மறியல்!

சனி, 31 அக்டோபர் 2009 (16:51 IST)
ஈழத் தமிழனத்தைப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச திருப்பதி வந்து சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயில் முன்பு சாலை மறியல் நடந்தது.

‘தமிழினப் படையணி’ என்ற அமைப்பைச் சேர்ந்த 30 பேர் இன்று மதியம் 1 மணியளவில் சென்னை தியாகராயர் நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலின் முன்பு திரண்டனர்.

ஈழத் தமிழினத்தை இனப் படுகொலை செய்த கொடுங்கோலன் ராஜபக்சவிற்கு அனுமதி அளிக்காதே! திருப்பதி தேவஸ்தானமே ராஜபக்சவை திருப்பி அனுப்பு! என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் தேவஸ்தான கோயிலின் முன்பு மறியல் செய்தனர்.

கொலைக்கார ராஜபக்சவிற்கு திருக்கோயில் பரிவட்டமா?

இனப் படுகொலை செய்தவனுக்கு பூரண கும்ப மரியாதையா?

என்று முழக்கங்கள் இட்டுக் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த காவலர்கள் அவர்கள் அனைவரையும் கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

திருப்பதி கோயிலிற்கு ராஜபக்ச வருவதைக் கண்டித்து சென்னையில் நடந்த இந்த மறியல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்