''ஒரு மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டத்தில் குடிபெயர்ந்து வாழும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர்மரபினர்க்கு வாழும் மாவட்டத்திலேயே சாதிச் சான்றிதழ் வழங்கப்படும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென் மாவட்டங்களில் இருக்கின்ற மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு மாவட்ட எல்லை வரையறையின்றித் தமிழகத்தில் எங்கு வாழ்ந்தாலும் சாதிச் சான்றிதழ்கள் வழங்கிட வேண்டும் என்று மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார் அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.
இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திடம் கருத்துரைகள் கேட்கப்பட்டன. அதன்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், குறிப்பிட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்குப் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகப்பிற்படுத்தப்பட்ட அல்லது சீர்மரபினர் என்று சான்றிதழ் வழங்குவதற்குரிய அளவுகோல்கள் அவர்கள் வேறுபகுதிகளில் குடியேறுவதால் மாற்றம் பெறாது என்பதும்;
எனவே அவர்கள் குடிபெயர்ந்து வந்தது மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் அல்லது எங்கிருந்து குடிபெயர்ந்தனரோ அந்தப் பகுதியில் அவர்களது வகுப்பின்நிலை ஆகியவற்றிற்கான ஆதாரம் அளிக்கப்பட்டால் அத்தகைய சான்றிதழ்களைக் குடியேறிய பகுதிகளில் உள்ள தகுதிவாய்ந்த அலுவலர்களே வழங்கலாம் என அரசுக்குக் கருத்துரை வழங்கியுள்ளது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ள இந்தக் கருத்துரையை ஏற்றுத் தென்மாவட்டங்களில், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பிற்படுத்தப்பட்ட அல்லது மிகப்பிற்படுத்தப்பட்ட அல்லது சீர்மரபினர் என்று அறிவிக்கப்பட்டுள்ள வகுப்புகளைச் சேர்ந்தவர்கள், அப்பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து மாநிலத்தின் வேறு பகுதிகளில் குடியேறியுள்ள நிலையில்,
அவர்கள் தாங்கள் குறிப்பிட்ட வகுப்பினைச் சேர்ந்தவர்கள் என்பதற்கும், அவ்வகுப்பு பிற்படுத்தப்பட்ட அல்லது மிகப்பிற்படுத்தப்பட்ட அல்லது சீர்மரபினர் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்பதற்கும் ஆதாரமாக, அப்பகுதிகளில் தங்கள் பெற்றோருக்கு வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழ் போன்றவற்றை வழங்கினால், அவர்களுடைய வகுப்பு அவர்களது சொந்த மாவட்டத்தில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளதோ அதற்குரிய சான்றிதழ்களைக் குடியேறிய பகுதிகளில் உள்ள சாதிச் சான்றிதழ் வழங்கும் அலுவலர்கள் வழங்கலாம் என முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.